மதுரை, மார்ச் 21: அமெரிக்கன் கல்லூரி ஆட்சிமன்ற விதிகள் பாதுகாப்பு செயல்பாட்டுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்லூரிப் பேராசிரியர் பிரபாகரன் வேதமாணிக்கம் தெரிவித்தார். கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
1881-ல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி பிரசித்திபெற்ற உயர்கல்வி நிறுவனமாக இயங்கிவருகிறது. கிறிஸ்துவ நிறுவனமாக இக்கல்லூரி அறியப்பட்டாலும், சிஎஸ்ஐ திருமண்டிலத்திற்குச் சொந்தமானதல்ல. கல்லூரியை நிர்வகிக்கும் அனைத்து அதிகாரமும் கல்லூரி முதல்வர் மற்றும் செயலரையே சாரும்.சிஎஸ்ஐ பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர், அமெரிக்கன் கல்லூரியை அபகரிக்க மேற்கொள்ளும் சட்டவிரோதச் செயல்களை எதிர்த்து கல்லூரியின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்,முன்னாள் மாணவர்கள்,பொதுமக்கள், நண்பர்கள் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இப்போராட்டம் உயர்கல்வியின் அடித்தளத்தை பாதிக்கும் வியாபார மயமாக்கம், கிரிமினல் மயமாக்கம் என எல்லாவகையான குற்றங்களையும், எதிர்த்துப் போராடும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
இப்போராட்டத்தை தனிநபர்களுக்கு எதிரான போராட்டமாக இந்த இயக்கத்திற்கு எதிரானவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பரப்புவதால், முறைப்படுத்தப்பட்ட அமைப்பாக ஆட்சிமன்ற விதிகள் பாதுகாப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நோக்கங்கள்: 1934-ல் எழுதப்பட்ட கல்லூரி ஆட்சிமன்ற விதிகளின் ஒவ்வொரு அம்சத்தையும், சட்டப்படி பாதுகாப்பதின் மூலம் சுதந்திரக் கல்வியை வழங்குதல், வியாபார நோக்கத்தோடும், கிரிமினல் செயல்பாடுகளால் அமெரிக்கன் கல்லூரியை வேறு எந்த மதப்பிரிவுகளோ அபகரிக்காதபடி சட்டப்படி எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் குழு இயங்கும்.
குழு நிர்வாகிகள்: குழுவின் தலைவராக கல்லூரியின் முன்னாள் முதல்வர் பி.டி.செல்லப்பா, துணைத்தலைவராக கல்லூரி முதுகலை தமிழ்த்துறைத் தலைவர் ஆர்.கே. அழகேசன், செயலராக கல்லூரிப் பேராசிரியர் வின்பிரட் தாமஸ், இணைச் செயலர்களாக பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம், டைப்பிஸ்ட் ரமேஷ் ஆகியோர் செயல்படுவர்.
இதன் உறுப்பினர்களாக 8 பேராசிரியர்கள்,மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் உள்ளிட்ட 17 பேர் இடம்பெறுவர் என்றார்.
No comments:
Post a Comment