EMBLEM

EMBLEM

Thursday, March 17, 2011

அமெரிக்கன் கல்லூரியில் தொடரும் போராட்டம்

தினமணி, 16 Mar 2011

மதுரை, மார்ச் 15: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அரசின் உயர்நிலைக் குழுவின் விசாரணையைத் தொடங்கவும், கல்லூரி வளாகத்தில் உள்ள வெளிநபர்களை அப்புறப்படுத்தக் கோரியும் வலியுறுத்தி, அக்கல்லூரி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அமெரிக்கன் கல்லூரி முதல்வர் நியமனத்தில் பிரச்னை நீடித்து வருகிறது. கல்லூரியின் ஆட்சிக்குழு விதிமுறைப்படி முதல்வர், செயலர் நியமனம் நடைபெற வேண்டும் என கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ்ஜோசப் ஜெயகுமார் தரப்பினர் கோருகின்றனர். ஆனால், பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்பினர் கல்லூரியின் முதல்வர், செயலரைக் கல்வி இயக்குநரகம் நியமித்து உத்தரவு

பிறப்பித்ததாகக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை உண்ணாவிரதம் இருந்த பேராசிரியர், மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் கற்களை வீசித் தாக்கியதுடன், கார் உள்ளிட்ட வாகனங்களையும் சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

ரகளையில் ஈடுபட்டோரைக் கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே இப்பிரச்னைக்கு காரணம் என்றும், வெளியாள்கள் கல்லூரி வளாகத்தில் புகுந்து அத்துமீறிச் செயல்படுவதாக ஒரு தரப்பு ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க, தல்லாகுளம் போலீஸ் உதவி ஆணையர் ராமசாமி தலைமையில் போலீஸôர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்கள் நுழைவுவாயிலில் அடையாள அட்டையை பரிசோதித்த பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கல்லூரி வளாகத்தில் பேராசிரியர் அன்புநாதன் தலைமையில் ஆசிரியர்கள்,

ஆசிரியல்லாத பணியாளர்கள், திங்கள்கிழமை நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

அப்போது, அரசு அமைத்த உயர்நிலைக் குழு உடனடியாக கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், கல்வீச்சு, வாகன உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்பால் நியமிக்கப்பட்டுள்ள கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஆர். மோகன், துணை முதல்வர் ஜெ.அருள்தாஸ் ஆகியோரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, கல்லூரி சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கல்வீச்சில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு முன்பு மாணவர்களிடம், நாங்கள் வகுப்புக்குச் செல்லும்படிதான் அறிவுறுத்தி இருந்தோம். இது நடந்தது பற்றி பின்னர்தான் தெரியவந்தது.

மாணவர்களை சிலர் கேலி செய்ததால் ஆத்திரமடைந்து, அவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், இப்பிரச்னையில் இரு தரப்பினரும் மாணவர்களின் நலன்கருதி சுமூகமாவே தீர்வுகாண விரும்புகிறோம். மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் இரு தரப்பையும் அழைத்து புதன்கிழமை (மார்ச் 16) பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, காவல் கூடுதல் துணை ஆணையர் எங்களிடம் கூறியுள்ளார். இதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றனர்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, கல்லூரி வளாகத்தில் போதிய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது. போலீஸார் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளனர். மாணவர்கள் மீதும், பேராசிரியர்கள் மீதும் கல்லூரி வளாகத்தில் இருந்த வெளியாள்கள் கும்பல் தாக்கியுள்ளது. கல்லூரி வளாகத்தில் காவல் துறையினர் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டனர். இந்த விஷயம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் கல்லூரியில் போதிய பாதுகாப்பை வழங்கும்படி கோரி மனு செய்ய உள்ளோம்.

இப்பிரச்னைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக தமிழக அரசு உயர்நிலைக் குழுவை அமைத்து அரசாணை வெளியிட்ட பிறகும், மாவட்ட அளவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவது சரியல்ல. இதுபற்றி ஆட்சியரும் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை- ஆட்சியர்: இதுகுறித்து ஆட்சியர் சி.காமராஜிடம் கேட்டபோது, அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அரசு உயர்நிலைக் குழு அமைத்துள்ளது. அக்குழுதான் இதுபற்றி விசாரிக்கும். அதனால், இதுபற்றி பேச்சுவார்த்தையை நான் மேற்கொள்வது இயலாது. எனினும், கல்லூரி வளாகத்தில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

No comments: