தினமணி மதுரை, ஜன 04
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதல்வராக யார் பொறுப்பு வகிப்பது என்ற பிரச்னை நீடித்துவரும் நிலையில், கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை ஒரு தரப்பு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்னையில், அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலராகப் பணியாற்றி வந்த சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இதனால், அப்பதவியில் பொறுப்பு முதல்வர் மற்றும் செயலராக உதவி முதல்வர் பி.ஆர். அன்புதுரை நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, பேராசிரியர் மோகன் என்பவர் பொறுப்பு முதல்வராகப் பதவிவகிக்க கல்லூரி கல்வித் துறை ஒப்புதல் வழங்கியதாக, மதுரை பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் தரப்பினர் கூறி வருகின்றனர்.
இப்பிரச்னையை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு கடந்த 20 நாள்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், "கல்லூரியில் விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி கல்லூரியைத் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என பி.ஆர். அன்புதுரை அறிவித்துள்ளார்.
இதனிடையே, பேராயர் தரப்பு முதல்வர் (பொறுப்பு) மோகன் வெளியிட்டுள்ள விளம்பர அறிவிப்பில், கல்லூரி விடுமுறைக்குப் பிறகு ஜன.5-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், கல்லூரி மாணவர்கள் இடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார், முதல்வர் பி.ஆர். அன்புதுரை, மூத்த பேராசிரியர் அன்புநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கல்லூரி நுழைவுவாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேராசிரியர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், ஆங்கிலத் துறை பேராசிரியர் ஜான்சேகர் கல்லூரியின் தற்போதைய நிலைமை குறித்தும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மட்டுமின்றி அலுவலகப் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment