EMBLEM

EMBLEM

Sunday, April 3, 2011

அமெரிக்கன் கல்லூரியை நிர்வகிக்க அதிகாரியை நியமிக்க வேண்டும்: உண்மை கண்டறியும் குழு வேண்டுகோள்

தினமணி | 02-04-2011
மதுரை, ஏப். 1: அமெரிக்கன் கல்லூரி விவகாரத்தில் இரு முதல்வர்களுக்கும் மாற்றாக உயர்நிலை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என உண்மை கண்டறியும் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையில் மனித உரிமை அமைப்பினரும் கல்வியாளர்களும் ஒருங்கிணைந்து உருவாக்கிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய விசாரணை அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பரிந்துரை விவரம்:

130 ஆண்டு பாரம்பரியம் கொண்ட அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் பிஷப் தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையைத் தீர்க்க கல்லூரி கல்வி இயக்குநர் முயற்சிக்கவில்லை.

மாறாக அப்பிரச்னை வளர்வதற்கு அவரே ஒரு காரணாமாகியிருக்கிறார். சின்னராஜ் ஜோசப் பதவி நீட்டிப்புக்கும் ஒப்புதல் வழங்கவில்லை. பேராசிரியர் மோகன் பொறுப்பு முதல்வராக இருக்கவும் ஒப்புதல் வழங்கவில்லை. இருதரப்புக்கும் மாற்றாக ஒரு நியமனத்தை கல்லூரி கல்வி இயக்குநர் செய்திருக்க வேண்டும்.

இதனால் ஏற்பட்ட விளைவு கல்லூரிக்குள் மாணவர்கள் மோதும் சூழ்நிலை ஏற்பட்டு அவர்களது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு உடனடியாக உயர்நிலை அதிகாரி ஒருவரை நியமித்து கல்லூரியை செயல்படுத்த வேண்டும். 4 மாதங்களாக பேராசிரியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும்.

  மாணவர்களுக்கு முழுமையான அளவில் பாடங்கள் நடத்தப்படவில்லை என்பதால் அறிவிக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும்.
மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்.  
வன்முறையை தடுக்காத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கல்லூரி முதல்வர் நியமனத்துக்கான ஆட்சி மன்ற விதிகள் தெளிவாக இல்லாததால் அவற்றில் திருத்தம் செய்யலாம் என்பது போன்ற பரிந்துரைகள் வெளியிடப்பட்டன.

குழு உறுப்பினர்கள் ஹைதராபாத் பேராசிரியர் ரமேஷ்பட்நாயக், பேராசிரியர் ஆர்.முரளி, ஆசிரியர் ராமசாமி, வழக்கறிஞர் பால்ராஜ், மக்கள் உரிமைக்கான அமைப்பு நிர்வாகி கேசவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தனர்.

No comments: