Thinamani, 15 Mar 2011
மதுரை, மார்ச் 14: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திங்கள்கிழமை காலை உண்ணாவிரதம் இருந்த பேராசிரியர், மாணவர்களை தரக்குறைவாகப் பேசிய கும்பல், கல்லூரிக்குள் கற்களை வீசித் தாக்கியதுடன், கார் உள்ளிட்ட வாகனங்களையும் சேதப்படுத்தியது.
ரகளையில் ஈடுபட்டோரைக் கைது செய்யக் கோரி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால், கோரிப்பாளையம் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் நியமனத்தில் பிரச்னை எழுந்துள்ளது. கல்லூரியின் ஆட்சிக்குழு விதிமுறைப்படி முதல்வர், செயலர் நியமனம் நடைபெற வேண்டும் என, கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்ராஜ் ஜோசப் ஜெயகுமார் தரப்பினர் கோருகின்றனர்.
ஆனால், பேராயர் கிறிஸ்டோபர் தரப்பினர், கல்லூரியின் முதல்வர், செயலரை கல்வி இயக்குநரகம் நியமித்து உத்தரவு பிறப்பித்ததாகக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், கல்லூரி பிரச்னையைத் தீர்க்க உயர்மட்டக் குழுவை நியமித்து, பல வாரங்களுக்கு முன் உத்தரவிட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஆனால், இன்னும் குழு விசாரணையைத் தொடங்கவில்லை. இக் குழுவின் விசாரணையை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அக்கல்லூரியின் ஒரு தரப்பு மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆகியோர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு எதிராக கல்லூரி வளாகத்தில் மற்றொரு தரப்பு மாணவர்கள் உண்ணும் விரதம் இருப்பதாகக் கூறியதுடன், உண்ணாவிரதம் இருந்தவர்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும், சாம்பார் பொட்டலங்களை உண்ணாவிரதம் இருந்தவர்களை நோக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து சிலர் கற்களையும் வீசியதால், அவர்கள் பதற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினர். சிலர் கும்பலாக வந்து, வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை தடியால் அடித்து நொறுக்கினர். கல்லூரி முன்னாள் முதல்வர் வசித்துவரும் குடியிருப்புப் பகுதியில் பொருள்களைத் தாக்கி சேதப்படுத்தினர்.
தாக்குதலில் கல்லூரிப் பேராசிரியர்களின் 4 கார்கள் சேதமடைந்தன. பூந்தொட்டிகளும் உடைக்கப்பட்டன. பெரிய கலவரம் நடைபெற்றதைப் போல கல்லூரி வளாகம் காணப்பட்டது.
நடவடிக்கை கோரி மறியல்:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கல்லூரியின் முன்புறம் உள்ள கோரிப்பாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீஸ் துணை ஆணையர்கள் பி.கே.செந்தில்குமாரி, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதாக உறுதியளித்தனர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்தால்தான் மறியலை கைவிடுவோம் என்று கூறியவாறு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
சென்னையில் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் இதுபற்றி தகவல் அறிந்ததும், வருவாய்க் கோட்டாட்சியர் சுகுமாறனை கல்லூரிக்குச் சென்று விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியர், தெற்கு வட்டாட்சியர் கமலசேகரன் ஆகியோர் அமெரிக்கன் கல்லூரிக்கு வந்து, அங்கு சேதப்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் சேர்களையும், உண்ணாவிரதப் பந்தலையும் பார்வையிட்டனர். பின்னர், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
எனினும், கல்லூரி வளாகத்திற்குள் உள்ள வெளிநபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் மறியலைக் கைவிடுவோம் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் சுமார் 120 பேரை போலீஸôர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, இப்பிரச்னை தொடர்பாக கல்லூரி வளாகத்தில் இருந்த இளைஞர்கள் விக்னேஷ், தீபன், ராமநாதன் ஆகிய மூவரையும் போலீஸôர் பிடித்துச் சென்றனர். அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
No comments:
Post a Comment