EMBLEM

EMBLEM

Tuesday, February 8, 2011

அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை: உயர்நிலைக் குழு வருகை எப்போது?

தினமணி மதுரை 07 Feb 2011

மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு காண அரசு அமைத்த உயர்நிலைக் குழு வருகை தாமதமாவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்களும், பேராசிரியர்களும் கவலை அடைந்துள்ளனர்.

4 ஆயிரம் மாணவ, மாணவியர் பயிலும் பழமையான அமெரிக்கன் கல்லூரியில் முதல்வர் நியமனத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், செயலர் பதவி வகித்து வந்த சின்னராஜ் ஜோசப், ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு முதல்வராக பேராசிரியர் அன்புத்துரையை கல்லூரியின் விதிமுறையின்படி அவர் நியமித்தார்.

ஆனால் கல்லூரி மதுரை- ராமநாதபும் சிஎஸ்ஐ பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்பினர் இந்த நியமனத்தை பொருட்படுத்தாமல் பேராசிரியர் மோகன் என்பவரை முதல்வர் பதவியில் நியமிக்க அரசு ஒப்புதல் பெற்றதாகக் கூறிவருகின்றனர். மேலும், அவர்களுக்கு சில போலீஸ் அதிகாரிகள் ஆதரவு அளிதது வருவதால், கல்லூரி முதல்வர் அறை பூட்டை உடைத்து ஆக்கிரமித்திருப்பதாகவும் பேராசிரியர்கள் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற நிலையால், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரியின் விதிமுறைப்படியே கல்லூரி முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என பெரும்பாலான பேராசிரியர்களும், மாணவ, மாணவியரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர் நலன் கருதி பிரச்னைக்குத் தீர்வுகாண தமிழக அரசு, தலைமைச் செயலர் தலைமையிலான உயர்நிலைக் குழுவை அமைத்தது. ஆனால் இக்குழு அமைத்து பல நாள்களாகியும், விசாரணை தொடங்கப்படவில்லை.

ஏற்கெனவே கல்லூரியில் பாடம் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லாததால் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாடங்களை குறிப்பிட்ட நாள்களில் நடத்தி முடிக்க இயலாத நிலை உள்ளது.


ஆகவே பிரச்னையை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர, தமிழக முதல்வர் அறிவித்த உயர்நிலைக் குழு விரைவில் விசாரணையைத் தொடங்கி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என பெற்றோர்களும், பேராசிரியர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (4-2-2011) பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்தில் பேராசிரியர் அருளப்பன் தலைமையில் 56-வது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர். முதல்வர் பொறுப்பில் மோகன் நியமிக்கப்பட்டதை கல்லூரிக் கல்வி இயக்குநர் ஏற்கக்கூடாது என அதில் வலியுறுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் மற்றும் பேராசிரியர்கள் அன்புத்துரை, அன்புநாதன் உள்ளிட்ட பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

No comments: