EMBLEM

EMBLEM

Saturday, January 8, 2011

அமெரிக்கன் கல்லூரி பிரச்னையில் அதிகாரிகள் நியாயமாக நடக்கவில்லை

பேராசிரியர்கள் புகார்

தினமணி மதுரை, ஜன. 7:

மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் நியாயமாக நடக்கவில்லை என பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அமெரிக்கன் கல்லூரி முதல்வர் நியமனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து பெரும்பாலான பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் போராடி வருகின்றனர்.

வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற முதல்வர் சின்னராஜ் ஜோசப், பேராசிரியர்கள் அன்புத்துரை, அன்புநாதன், இளங்கோ,நவநீதக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து பேராசிரியர் அன்புநாதனிடம் கேட்டபோது அவர் கூறியது:

கல்லூரி முதல்வர் நியமனப் பிரச்னையில் கல்லூரியின் பெரும்பாலான பேராசிரியர்கள், அலுவலர்களின் கருத்துகளை கல்லூரிக் கல்வி இயக்குநர் கேட்டிருந்தார். இதையடுத்து விரிவான விளக்கத்தை மதுரையில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மூலம் கடந்த டிசம்பர் 22-ம் தேதி அனுப்பிவைத்தோம். ஆனால், அந்தக் கோப்பு சென்னையில் உள்ள கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக மதுரையில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் கேட்டபோது, சென்னைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறுகின்றனர். மேலும், சென்னைக்கு அனுப்பத் தேவையான நகல்கள் இல்லை என்றும் கூறுகின்றனர்.

ஆக, கோரிக்கை குறித்த விவரத்தை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்புவதில் மதுரையில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன் எனத் தெரியவில்லை. இதுகுறித்து சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.

இந்த நிலையில் பேராயர் தரப்பைச் சேர்ந்தவர்கள் கல்லூரி திறக்கப்படுவதாக அறிவித்து, அந்தத் தரப்பு பேராசிரியர்கள் கல்லூரிக்கு வந்திருந்தனர். பொருளாதாரம் மற்றும் வணிகவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வந்து வகுப்பறையில் இருந்ததையும் காண முடிந்தது.

இதுகுறித்து கல்லூரி முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் தரப்பினர் கூறுகையில், கல்லூரியில் குறிப்பிட்ட பாடப் பிரிவைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே வந்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் பாதுகாப்பு கருதி வரவில்லை. மீண்டும் முறையான விதிப்படி கல்லூரி செயல்படும் போது மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் பாடம் நடத்தி முடிக்கப்படும் என்றனர்.

கல்லூரிக்குள் வெளியாள்கள் நடமாட்டம் இருப்பதாகவும், இதுகுறித்து காவல் துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் கூறினர்.

No comments: