Thinamani, 14 Dec 2010 11:28:36 AM IST
மதுரை, டிச.13: அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையில் முறைப்படியான ஆவணங்கள் ஏதுமின்றி கல்லூரி முதல்வர் அறைக்குள் பேராயர் தரப்பினர் நுழைந்திருப்பது சரியல்ல என பேராசிரியர் சாலமன்பாப்பையா தெரிவித்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் அறைக்குள் நுழைந்தவர்களை வெளியேற்ற வேண்டும். கல்லூரிப் பிரச்னையில் நடுநிலையுடன் செயல்படாத, கல்லூரிக் கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் திங்கள்கிழமை கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் சாலமன் பாப்பையா கூறியதாவது:
அமெரிக்கன் கல்லூரியில் பேராயருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஏற்கெனவே, நிர்வாகக் குழு கூடி கல்லூரி முதல்வர் பொறுப்பை உதவி முதல்வரிடம் ஒப்படைத்துள்ளது. மேலும் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பணிநீட்டிப்புக் கோரி வழக்கும் தாக்கல் செய்துள்ளார்.
இத்தகைய நிலையில் கல்லூரி நிர்வாகக் குழுவைக் கூட்டியதாகக் கூறுவது எப்படி? அக்குழுவுக்கு எத்தனை பேர் வந்தனர்? ஆகவே, பேராயர் தன்னிச்சையாக தனது மருமகன் மூலம், கல்லூரிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலே, கல்லூரி முதல்வர் அறைப் பூட்டை உடைத்து நுழையச் செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல, கல்லூரியின் வளாக இடத்தை விற்கும் திட்டமும், தற்போது வெளிவந்துள்ளது.
இக்கல்லூரி பிரச்னையில் எனக்கு ஏன் ஆர்வம் எனக் கேட்கிறார்கள். நான் இக்கல்லூரியில்தான் 4 ஆண்டுகள் படித்தேன். 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். ஆகவே, எனக்கு கல்லூரிப் பிரச்னையில் தலையிட அனைத்து உரிமைகளும் உள்ளன. எனது மகள் இங்கு பணிபுரிந்து வாங்கும் ஊதியம், போக்குவரத்துக்குக் கூட போதாது. ஆகவே, இதற்கும் மேலாக விளக்கம் அளிக்கத் தேவையில்லை.
கல்லூரியை சீராக்கும் வகையில், வரும் ஜனவரி முதல் தீவிரமாகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனது உயிர் போனாலும் பரவாயில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய, இக்கல்லூரிக்காகப் போராடுவேன். பலரிடமும் கல்லூரிக்காக மடிப்பிச்சை கேட்கிறேன். பிரச்னையைத் தீர்க்கும் அதிகார இடத்தில் இருப்போர், நீதிக்குத்தான் துணை நிற்க வேண்டும்.
விதிமுறைப்படி ஆவணங்கள் ஏதுமின்றி, கல்லூரி முதல்வர் அறைக்குள் நுழைந்திருப்போரை அப்புறப்படுத்த, அரசு முன்வர வேண்டும். கல்லூரி முதல்வர் பொறுப்பு குறித்து, கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆனால், கல்லூரி சம்பந்தப்பட்ட ஆவண நகல்கள், பேராயருக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, கல்லூரி பொறுப்பு முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள், பேராசிரியைகள் கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்குள் ஆயுதங்களுடன் இருக்கும் வெளிநபர்களை அகற்றவும், கல்லூரி கல்வி இணை இயக்குநர் மீது விசாரணை நடத்தவும், மாநில கல்லூரி கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு தந்தி அனுப்பப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment