EMBLEM

EMBLEM

Tuesday, June 10, 2008

ஒரு விளக்கம்

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் (மத். 5:10)

மதுரை-ராமநாதபுர திருமண்டிலக் கிறிஸ்துவ போதகர்களுக்கும், சபை மக்களுக்கும் நீதியின் மேல் பசி தாகமுடைய அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள் அளிக்கும் ஒரு சிறு விளக்க வெளியீடு:



இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துதல்கள்.



அமெரிக்கன் கல்லூரியைப் பொருத்தவரை பேராயரின் செயல்பாடுகள் கிறிஸ்துவத்தின் அடிப்படை பண்புகளுக்கு மாறாக இருப்பதை நொந்த இதயத்தோடும், உடைந்த மனத்தோடும் உங்களுக்குத் தெரியப்படுத்த எண்ணியே இந்த வெளியீட்டைத் தயாரித்துள்ளோம்.

1. மாட்சிமை பொருந்திய பேராயருக்கு ஏற்கெனவே திருமண்டிலத்தில் இருக்கின்ற நிறுவனங்களுக்கான அதிகாரமே போதும். புதிதாக அமெரிக்கன் கல்லூரியின்மேல் அதிகாரம் செய்ய அவருக்கு தேவை என்ன? எல்லோருக்கும் பணிவிடைக்காரனாகவே இருக்க எங்கள் பேராயர் விரும்புகிறார். அப்படியிருக்கும்போது வீணாக ஏன் கற்பனை செய்து கொள்கிறீர்கள்? - என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.

அதிகாரத்தின்மேல் கனம் பேராயர் அய்யா அவர்களுக்கு ஆழமான காதல் எப்பொழுதுமே உண்டு. அதனால்தான் இவருக்கு முன்னால் இருந்த பேராயர்கள் அனுசரித்த முறையை மாற்றித், தானே அனைத்துப் பள்ளிகளுக்கும் “தாளாளர்” என்று அறிவித்துக் கொள்கிறார். அந்த அதிகார ஆசைதான் விரிவடைந்து தற்போது கல்லூரி வரை வந்துள்ளது. இறைப்பணியிலே இருக்கின்ற பேராயர் இதுபோன்ற பதிவிகளிலே இருந்து விலகி இருந்தால்தானே பேராயர் பணியைச் சரியாக செய்ய முடியும். இறைப் பணியிலே ஈடுபடுபவர்கள் தாழ்மை எண்ணத்தோடு அல்லவா இருக்க வேண்டும். அதிகார மனப்பன்மையோடு இருப்பது கிறிஸ்துவத்திற்கு அருவருப்பானது அல்லவா? ஏனெனில் தன்னைத்தான் வெறுக்க வேண்டும் என்பது கிறிஸ்தவ சித்தாந்தம். கனம் பேராயர் தன்னையும் வெறுக்கவில்லை; தன் குடும்பத்தாரையும் வெறுக்கவில்லை. அவர்களும் அதிகாரம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உடையவராகப் பதவியேற்ற நாள் முதலாகவே திட்டமிட்டுச் செயலாற்றி வந்திருக்கிறார் என்பதைக் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் மூலம் நாங்கள் நன்றாகவே அறிகிறோம்; நீங்களும் அறிவீர்கள்.

கல்லூரியில் தன் அதிகாரத்தைக் கொடி கட்டிப் பறக்கவிடுவதற்கு முதற்கட்டமாகத் தன் மருமகனை (பல மூத்த பேராசிரியர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு) நிதிக்காப்பாளராக ஆக்குகிறார். தன் கனவு கனிவதற்கான காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில், தற்போதைய முதல்வர் முனைவர் சின்னராஜ் ஜோசப் ஜெய்குமார் அவர்கள் வெளிநாடு செல்லவிருப்பதைப் பேராயரிடம் தெரியப்படுத்துகிறார். வெளிநாடு செல்வது தொடர்பாக முதல்வர் பேராயரைச் சந்திக்கச் சென்ற இடத்தில் முதல்வரது மனதை எந்த அளவுக்கு நோகடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நோகடித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு அன்பு வார்த்தைகளுக்குப் பதிலாக அநாகரீக வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரது ‘கிறிஸ்தவ அன்பை’ வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் இதை ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணிய அவர் தன் கனவிற்குச் செயல்வடிவம் கொடுக்க ஆரம்பிக்கிறார்.

பேராயரின் செயல்பாடு கண்டு அதிர்ச்சியடைந்த முதல்வர், கல்லூரியைச் சுற்றியும், தன்னைச் சுற்றியும் நடக்கக்கூடிய சதிச் செயல்களை அறிந்து தன் வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்கிறார். மேலும் அன்றைய நிலையில் அரசு இவரது விடுப்பு விண்ணப்பத்தை அங்கீகரிக்கவில்லை. வெளிநாட்டுப் பயணத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பயணத்தை ரத்து செய்த விவரத்தை மரபை அனுசரித்து முதலில் துணை முதல்வரிடம் தெரிவிக்கிறார். பின் இந்தத் தகவலை ஆசிரியர் அறையில் சுற்றறிக்கையின் மூலம் ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். இந்தத் தகவல் தனக்குத் தெரியவில்லை என்பதற்காகத் துணை முதல்வரைப் பொறுப்பு முதல்வராக அறிவித்து அதிரடி அரசியல் செய்வது பேராயர் பதவிக்கு அழகா?

2. அமெரிக்கன் கல்லூரி விவகாரத்தில் பேராயர் நீதியின் மேல் பசி தாகமுடையவராக இருந்து நீதியாகத்தானே செயல்பட்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளில் குறையுண்டா?

பெயர்பெற்ற எந்தக் கல்லூரியுமே திருமண்டிலத்திற்குட்பட்டு இல்லை என்பதை அறிந்த பேராயர் எந்த விலை கொடுத்தாவது – எந்த வழியிலாவது கல்லூரியைத் திருமண்டிலத்தோடு இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பதவியேற்ற நாளிலிருந்தே தன் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டார். ஆனால் வெளியில் (“அமெரிக்கன் கல்லூரி மிக நன்றாகச் செயல் பட்டுமக்கொண்டிருக்கிறது. அதனைத் திருமண்டிலத்தோடு இணைக்கும் எண்ணம் தனக்குத் துளிக்கூட இல்லை” – முந்தைய ஆட்சிக் குழுக்கூட்டத்தில் பேராயரின் பேச்சு) வேறுமாதிரியாகப் பேசினார். நாங்களும் நம்பினோம். ஆனால் தன் ஆழ்மனதில் எண்ணிய காரியத்தைப் பிறரறியாமல் செய்ய எண்ணினார். அந்த எண்ணத்தை முதல்வர் வெளிநாடு போன வேளையிலே கமுக்கமாகவும் – சுமுகமாகவும் – முடித்து விடலாம் என்ற எண்ணம். (“உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல. உங்கள் வழிகளும் என் வழிகளும் அல்ல” என்ற வேத வசனத்தைப் பேராயர் மறந்து விட்டார் போலும்.)

இறைமகன் யேசுவின் திருவுளச் சித்தம் வேறு மாதிரியாக இருக்க முதல்வர் வெளிநாடு செல்லவில்லை. அவர் இங்கிருப்பது தெரிந்துமே தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த பேராயர், துணை முதல்வரை அழைத்து அவரை முதல்வராகப் பணி நியமனம் செய்கிறார். (ஆட்சிக் குழுவுக்கு மட்டுமே உரிய அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டார்) என்ன காரணம்? ஆட்சிக்குழுவே தான்தான் என்ற எண்ணம்தான். துணை முதல்வரைப் பணி நியமனம் செய்ததற்கு மறுநாள் தனக்கு வேண்டிய காவல்துறை அதிகாரியின் துணையுடன், முதல்வர் அறையைத் தன் மருமகனும் நிதிக்காப்பாளருமான திரு தவமணி கிறிஸ்டோபரின் மேற்பார்வையில் பூட்டச் சொல்கிறார். இது நீதியான காரியமா? நினைத்துப் பாருங்கள்.

ஆட்சிக்குழுவை முதல்வர் மற்றும் செயலராக யார் இருக்கின்றாரோ அவர்தான் கூட்ட முடியும் என்பது கல்லூரி ஆட்சிக் குழுவின் சட்டவிதி. அதையும் மீறி யாருக்குப் பொறுப்பு-முதல்வர் வழங்கினாரோ அவரை வைத்து ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டுகிறார். (அவர் தற்போதைய முதல்வரால் பதவியிலிருந்து நீக்கப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.) அந்தக் கூட்டத்திற்குப் போதுமான உறுப்பினர்கள் வந்தால்தானே கூட்டம் நடந்தது செல்லுபடியாகும் என்பதற்காகப் பதவியை ராஜினாமா செய்தவரைக் கூட்டத்திற்கு வரவழைத்தையும், வெளிநாடு சென்றவருக்குப் பதிலாகத் தன் செல்வாக்கைப் பயன்படுத்திப் புது நபரை நியமித்ததையும், வர இயலாத நபர் இருக்குமிடம் (கொடைக்கானல்) சென்று கையெழுத்தைப் பெற்றதையும் என்னவென்று சொல்ல …..?

சட்ட விரோதமாகக் கூட்டப்பட்ட அந்த ஆட்சிக்குழுவின் தீர்மானத்தைக் கையில் எடுத்துக் கொண்டு (கூட்டம் நடந்து முடிந்தது காலை 11 மணியளவில். ஆனால், உடனே வராமல் இரவு 7.30 மணிக்குக் கல்லூரி வளாகத்திற்குள் அடியாட்கள், அன்னியர்கள், ஆதரவற்ற பச்சிளங் குழந்தைகள் புடைசூழ ஆக்ரோஷமாக வந்தார்களே … இது என்ன மாதிரியான கிறிஸ்தவம்?) இரவில் வந்து அமைதிப் பூங்காவில் வெறியாட்டம் ஆடினார்களே; அமளி துமளி செய்தார்களே! இரவு முழுமையும் விழித்திருந்து நம் இறைமகன் ஜெபிக்கத்தானே சொன்னார். எங்காவது விழித்திருந்து வன்முறையைத் தூண்டுங்கள் என்று கூறினாரா? இல்லையே. நம் மதிப்பிற்குரிய பேராயரும், அவரது குடும்பத்தாரும் அவர்களால் அழைத்து வரப்பட்ட கூலிப்படைகளும் அதையல்லவா செய்துவிட்டார்கள்.

உறவுகளை துறந்து, ஊரை மறந்து இங்கே வந்து இறைப்பணியோடு, கல்விப் பணியையும் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இக்கல்வி ஆலயத்தைத் தோற்றுவித்த புனிதர்களின் ஆத்மாக்கள் அனைத்துமே கதறி கலங்கித் துடித்திருக்குமே. நாங்கள் ஆசையோடு அன்போடு நாளும் வணங்கி ஆராதித்த, தாயாகப் பாவித்த கல்லூரியை நிர்க்கதியாக்கத் துடிக்கின்றனரே என்றெண்ணி அழுது தவித்திருக்குமே. அவர்கள் மனதை ஏவியும், அவர்களை இங்கு அனுப்பியும் கல்விப்பணியைச் செய்யச் சொன்ன இறைமகனும் அல்லவா துடித்திருப்பார்.

கல்லூரிக்கு ஏதோ ஒன்று நடக்கிறது என்றெண்ணி அதன்மீது அன்பு வைத்த மாணவர்கள் விரைவாகக் கல்லூரிப் பேரவையின் (மெயின் ஹால் ) முன்னால் கூடினர். அவர்கள் கூடியதிலும், கல்லூரிப் பேரவையின் படிக்கட்டுகளில் அமர்ந்ததிலும் நியாயம் இருக்கிறது.

"குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; ஏனெனில் மோட்ச ராஜ்ஜியம் அவர்களுடையது"????

ஆனால் கல்லூரிக்கு எந்த வகையிலும் தொடர்பேயில்லாத ஆதரவற்ற பிஞ்சுக் குழந்தைகளையும், செவிலியர் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவிகளையும் அழைத்து வந்து எங்கள் கல்லூரி மாணவர்களுக்குப் போட்டியாக அமர வைத்த கேவலமும், அதனால் பெரும்பதட்டத்தை உருவாக்கிய காலித்தனமும் இதுவரை கிறிஸ்தவம் அறியாத ஒன்று.



இப்படி ஒரு கேவலத்தைக் கல்லூரிக்குள் நடாத்தியதோடு மட்டுமின்றி, கூட்டி வந்த இந்தக் கூட்டத்தில் நடு மைய நாயகனாக கனம் பேராயர் “கம்பீரமாக” அமர்ந்து கோலோச்சியதைக் காணக் கண்கோடிதான் வேண்டும்!! … இதற்குமேல் என்னவென்று சொல்ல …? வன்முறைக் கலாச்சாரத்தை என்றைக்குமே கிறிஸ்துவம் சாடியே வந்திருக்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பது தானே கிறிஸ்துவ அன்பு. இல்லையா? ஆனால் இங்கோ …?

கல்லூரியைக் கையகப்படுத்தும் எண்ணம் வந்த நாளில் இருந்து நீதிக்கும், அன்புக்கும் புறம்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரே நம் பேராயர். பேராயரின் இந்த செயல்பாடுகளால் கிறிஸ்தவம் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறதே. இவர்களால் கிறிஸ்தவம் இந்த மண்ணில் வளர்ந்து தழைத்தோங்கும் என்ற எண்ணம் எங்களுக்குக் கிஞ்சித்தும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே. தயவு செய்து அன்பு குருமார்களே, சபையினரே, உங்கள் மனங்களிலே நாங்கள் எழுப்புகின்ற வேதனையோடு கூடிய நீதியின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டுமே! இது கிறிஸ்துவத்தை வளர்க்கும் குரலாக ஓங்கைப் பிரவாகம் எடுத்துப் பாய வேண்டுமே!

இம்மைப் பயன்கருதி அவர் செய்கிற இந்தக் காரியங்களுக்கு (கல்லூரியைத் திருமண்டல சொத்தாக .. இல்லை .. இல்லை .. தன் குடும்பச் சொத்தாக மாற்றுவதற்கும், குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதிச் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கும்..) உங்களையும், திருமண்டிலம் சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருப்போரையும் பகடைக்காய்களாக, பலிகடாகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரே. வேதனைப் படுகிறோம். இறைப் பணியாளர்களால் உருவாக்கப் பெற்ற கல்லூரிக்கு இறைப்பணியாளர்களே, சபை மக்களே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். வெள்ளை மனத்தோடு வாருங்கள். உங்களோடு கலந்து பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். உண்மையைத் தாராளமாக உணர்ந்து ருசியுங்கள். பிறருக்கும் உண்மையின் ருசியை அள்ளி வழங்குங்கள்.

பேராயர் இவ்வுலகத்திற்கான காரியங்களைத் தூக்கி எறிந்துவிட்டு மறுமைக்கு உரிய காரிய்ங்களை அல்லவா சிந்தித்திருக்க வேண்டும்; செய்திருக்க வேண்டும். தன் சொல்லாலும் செயலாலும் உலகம் முழுமையையும் ஆண்டவருக்காக அல்லவா ஆதாயம் செய்திருக்க வேண்டும். செய்தாரா? இல்லையே..! தனக்காகவும், தன் குடும்பத்தாருக்காகவும் அல்லவா ஆதாயம் செய்து கொண்டிருக்கிறார். நீதியின் மேல் தாகமற்றவராக அல்லவா மாறி விட்டார். அன்புக்குரியவர்களே! தயை கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.

3. கல்லூரியைப் பற்றிப் பேராயர் தொடர்ந்து கூறுகின்ற தகவல்கள் உண்மையைப் போல் அல்லவா உள்ளன.

பேராயர் கூறுகின்ற தகவல்களில் உண்மை என்பது துளிக்கூட இல்லை. இக்கல்லூரி திருமண்டலத்திற்குப் பாத்தியப்பட்ட கல்லூரி அல்ல. திருமண்டிலத்தின் கருத்துக்களைப் பிரதிபலித்தாலும் அதற்குக் கீழ்ப்பட்டு இயங்கும் கல்லூரி என்ற செய்தி இவர்களாகவே உருவாக்கிக் கொண்ட மாயைதானே தவிர, உள்ள படிக்கு அது முற்றிலும் உண்மையற்ற செய்தி. கல்லூரிச் சட்ட விதிகளிலும் இது தெளிவாகவே உள்ளது. சில நாட்களுக்கு முன் அமெரிக்கன் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் இருந்து வந்த கடிதங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

(பார்க்க: 1.http://saveamericancollege.blogspot.com/2008/04/blog-post_5909.html

2. http://saveamericancollege.blogspot.com/2008/04/blog-post_4933.html

கடந்த சில ஆண்டுகளாக நிதியறிக்கையை முதல்வர் தாக்கல் செய்யவில்லை; எனவே சங்கம் கலைக்கப் பட்டுவிடும் என்பதும் இவர்களே கிளப்பும் வீண் வதந்தி. முதல்வர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கூட முடியவில்லை. மேலும் நிதியறிக்கைக்குத் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் முதல்வர்தான் என்றாலும், முறையாக உரிய நேரத்தில் நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்து அனுப்ப வேண்டியவர் நிதிக் காப்பாளர்தான். அவர்தானே இந்தப் பிரச்சனைக்குக் காரணகர்த்தா. அவர் தயாரித்துக் கொடுத்ததால்தானே இவர் சமர்ப்பிக்க முடியும். அறிக்கை தயாராகாததற்குப் பின் பேராயர் இருக்கிறார் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. அதை விட்டுவிட்டுத் திரும்பத் திரும்ப உண்மைக்கு மாறான செய்திகளைச் சொல்லிக் கொண்டு இருப்பதால் பொய் உண்மையாகி விடாது. ‘வெளியாக்கப் படாத மறை பொருளும் இல்லை’ என்ற வேத வசனம் உயிரோடு இருக்கிறது என்பதை ஆண்டவர் காட்டிக் கொண்டே இருக்கிறார். தயவு செய்து இதை உங்கள் மனங்களில் பதித்து வையுங்கள்; முடிந்தால் பேராயரிடமும் சொல்லுங்கள்.

4. 127 ஆண்டுகளாக நன்றாக இயங்கிய கல்லூரி தொடர்ந்து நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தானே பேராயர் இவற்றைச் செய்கிறார்; அதில் என்ன குறை காண முடியும்?

கல்லூரி நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் துளிகூட இல்லை. இருந்திருந்தால் 19.04.08 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்குப் பின் 20.04.08 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றதே. அதற்கு உடன்பட்டிருக்க வேண்டும் அல்லவா? தற்போதைய முதல்வர் உடன்பட்ட போதும், நம் சமாதான பிரபுவின் போதனைகளை நாளும் சொல்லி வfருகிற பேராயர் இதற்கு உடன்படவில்லையே. மாறாக மேலும் மேலும் புதுப் புதுக் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரே. இந்தக் குழப்பங்களின் தன்மையும், பட்டியலும் சொல்லிமாள முடியாது. கல்லூரியின் பெருமைக்கும், நாம் சார்ந்திருக்கின்ற நம் சமயத்துக்கும் அல்லவா இவரது காரியங்கள் உலை வைத்துக் கொண்டிருக்கின்றன.

மேலும் நீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பைச் சொன்ன பின்பும், அது குறித்த கரிசனை இல்லாமல் பதவி நீக்கப் பெற்ற துணை முதல்வரை முன்னிலைப் படுத்தி மாணவர் சேர்க்கைக்கான விளம்பரங்கள் மட்டும் நாளிதழ்களில் வருகின்றன. ஆனால் கல்லூரியில் அவர்களின் தொடர்பின்றி மாணவர் சேர்க்கை ஒழுங்காக எந்த வித பிரச்சனைகளின்றி நடை பெற்று வருகின்றது. பெற்றோர், மாணவர்களிடையே குழப்பம் விளைவிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோள் அவர்களுக்கு. இதனால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமே என்ற நினைப்பே இல்லாமல் போய்விட்டது. இங்கு பல ஆண்டுகளாக வேலை பார்த்தும் கல்லூரி நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்களுக்கு இக்கல்லூரியின் மேல் என்ன உரிமை? முடிந்தால் அடைய வேண்டும்; முடியாவிடில் அழிக்க வேண்டும் என்ற வெறியா? குழப்பத்தைத் தொடர்ந்து உருவாக்குவதின் மூலம் மக்கள் அரங்கில் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் இவர்கள் எண்ணம் ஏதும் வெற்றி பெறவில்லை. இதுவரை சென்ற ஆண்டுகளில் போலவே கொடுக்கப்பட்டுள்ள மாணவர் நுழைவுப் பத்திர விற்பனையும், சுமுகமாக நடந்து வந்துள்ள மாணவர் சேர்க்கையுமே இதற்கு அத்தாட்சி.

உள்ளபடியே கல்லூரி நலனில் பேராயர் அக்கறை கொண்டிருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

1. பொய்ப் பிரச்சார செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

2. நானே ஆட்சிக் குழு; நான் சொல்வதுதான் சட்டம் என்ற எண்ணமின்றி முறையோடு நடந்திருக்க வேண்டும்.

3. சட்ட விரோதமாக ஆட்சிக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

4. வன்முறையின் மேல் நம்பிக்கை வைத்திருக்காமல், அரவணைத்துச் செல்லும் போக்கைக் கையாண்டிருக்க வேண்டும். (19.04.08 அன்று இரவு நடத்திய “அராஜக தர்பார்” ஒன்று மட்டும் கூட போதும் அவர் யார் என்பதை உணர்ந்து கொள்ள.)

5. பணபலத்திலும், அடியாள் பலத்திலும் வைத்த நம்பிக்கையில் பாதியாவது சட்டத்தின் மீதும், நியாயத்தின் மீதும் வைத்திருக்க வேண்டும். ( R.D.O. அலுவலகத்தில் அமைதிப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போது அங்கு வெளியே பேராயரின் குடும்ப ஆட்களோடு நின்ற அடியாட்படை இதை உறுதிப் படுத்தும்.)

6. ஜனநாயக முறைப்படி நடந்திருக்க வேண்டும்.

7. முதல்வர் மேல் பேராயருக்கு அதிருப்தி இருந்தால், சமயப் பெரியாராகிய அவர் நியாயமாக விசாரித்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

8. தனி மனித அவதூறு செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் செய்தாரா? செய்யவில்லையே! இம்மண்ணில் சிறு பான்மையினராகிய நாம் சிறுமை அடையக் கூடிய காரியங்களை அல்லவா அடுக்கடுக்காகச் செய்து கொண்டே போகிறார்.

ஆவியிலே எளிமையுள்ளவராக அவர் இல்லாததே கல்லூரியின் இன்றைய நிலைக்குக் காரணம். ஆவியில் எளிமையுள்ளவர்கள்தான் பாக்கியவான்கள் என்பது அருள்நாதரின் மலைப்பொழிவின் ஆரம்பம். இந்த ஆரம்பப் பாடத்தை மறந்துவிட்டாரே எங்கள் பேராயர் என்ற ஆதங்கத்தில்தான் இந்த வெளியீட்டைத் தங்களின் மேலான பார்வைக்குக் சமர்ப்பிக்கின்றோம்.

இறுதியாக ஒரு வேண்டுகோள்:

தயவுசெய்து எங்கள் கல்லூரியில் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் எந்தவிதக் குறுக்கீடுமின்றி நாங்கள் தொடர்ந்த கல்விப் பணியில் வீறுகொண்டு செயல்படுவதற்கு ஜெபியுங்கள்.

கல்லூரியைக் காக்கும் பணியில் அயராது ஈடுபட்டிருக்கும் இரட்சண்ய வீரராகிய நம் அனைவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கி, எம்மைப் பலப்படுத்தவும் ஊக்கமாக ஜெபியுங்கள்.

2 comments:

Dr.N.Kannan said...

மிக அழகான, தெளிவான, அன்பான விளக்கம். இறைக்கிருபை நிச்சயம் உங்களுக்கு உண்டு, எங்கள் பிரார்த்தனைகளையும் சேர்த்து.

நா.கண்ணன்
முன்னாள் மாணவர்
தென் கொரியா

Unknown said...

Thanks a lot for all the clarifications that was given in the message.
Surely i'll keep in my prayers that my college must be saved. It seems that for a small moment God have forsaken my college but with his great mercies he will gather my college. (IS:54:7).
I am remembering all my prof's and my juniors who are now suffering.. in my prayers.
Be Bold and courageous, God is with us, surely we will end up in success.

viola.