EMBLEM

EMBLEM

Monday, April 21, 2008

19ம் தேதி ...பகல் முழுவதும் ...2




19ம் தேதி ...பகல் முழுவதும் ...2

காலை 11 மணியளவு வரை குறு அறிக்கைகளை விநியோகித்துவிட்டு, கல்லூரிக்குத் திரும்பிய போது, பிஷப் இரட்சண்யபுரத்தில் இருக்கும் தனது அலுவலகத்தில் நம் கல்லூரியின் சட்டமன்றக் குழுவை (GC - Governing Council) கூட்ட முயல்வதாகத் தகவல்கள் கசிந்தன. 12 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாகத் தகவல்கள் வர ஆரம்பித்தன.

மதியம் ஒரு மணிக்கு கூட்டம் முடிந்து ஜார்ஜ் செல்வகுமார் கல்லூரி முதல்வராகவும், கிறிஸ்டோபர் தவமணி துணை முதல்வராகவும், அருட்பிரகாசம் (பொருளாதாரம்) பர்சாராகவும், அலெக்ஸாண்டர் (தமிழ்) Dean ஆகவும் பதவியில் அமர்த்தப் பட்டுள்ள தகவல்கள் வந்தன. அதோடு, நம் கல்லூரி மாணவர்கள் சிலரை இங்கிருந்து (சாமி டீ கடையில் இருந்து) காரில் அழைத்துச் சென்று அங்கு அவர்களை வைத்து புதிதாக “பதவியேற்றவர்களுக்குப்” பொன்னாடை அணிவித்து, புகைப்படங்களெல்லாம் எடுத்த செய்தி வந்தது. அங்கிருந்து மதிய உணவை முடித்துவிட்டு நேரே நம் கல்லூரிக்குள் வந்து கலகம் விளைவிக்கலாம் என்ற வதந்தி பரவியது. (அதுவே அவர்கள் திட்டமாயிருந்திருக்கிறது.)

எல்லோரிடமும் பதட்டம். அங்கிங்கு என்றிருந்த ஆசிரியர்கள், ஆசிரியல்லாத அலுவலர்கள், பழைய மாணவர்கள், இப்போதைய மாணவர்கள் எல்லோரும் கல்லூரியின் கதவருகே குழுமி நின்றோம். (இது அவர்களின் திட்டத்தை மாற்றியிருக்கிறது என்பது பின்னால் நடந்தவைகளை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது.) Washburn Gate மாலைவரை இதே பரபரப்புடன் இருந்தது. அப்போதே ஒன்று புரிந்தது; நிச்சயம் மால 6 மணிவரை அவர்கள் கல்லூரிக்குள் நுழைய முயல மாட்டார்கள். அதன் பிறகு என்ன என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது.

ஆனாலும் மாலை 6 மணிவரை இப்போதைய மாணவர்கள், பழைய மாணவர்கள் அனைவரும் படபடப்போடு காவல் இருந்தார்கள். காலையிலிருந்து கல்லூரியைக் கடந்து செல்லும் அழகர்திருவிழாக் கூட்டமும், கல்லூரி வாயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரு காவல்துறை வண்டிகளும் அவ்வப்போது கல்லூரிக்குள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தக் காரணங்களாக இருந்தன!

நம் கல்லூரியைப் பொறுத்தவரை படித்துச் சென்ற மாணவர்களும் ஆசிரியர்களும் நம் கல்லூரியின் பாரம்பரியம், heritage என்று அடிக்கடி பேசுவதுண்டு. நானும் என் 33 வருட அமெரிக்கன் கல்லூரி வாழ்வில் பல முறை அதனைக் கண்டிருக்கிறேன்; அனுபவித்திருக்கிறேன். 19-ம் தேதியும் அப்படி ஒரு நிகழ்வினைக் கண்டேன் கல்லூரியில் அறிவிக்கப்பட்டிருந்த படி தேர்வுகள் எவ்வித மாற்றமோ, குழப்பமோ இல்லாதவாறு ஒழுங்காக அமைதியாக எப்போதும்போல் நடந்து கொண்டிருந்தன – வெளியே இருந்த பரபரப்பு தேர்வு எழுதும் மாணவர்களைப் பாதிக்காதவாறு இருந்தது. தேர்வு எழுத வந்த மாணவர்கள் நேரே தேர்விடங்களுக்குச் சென்று தேர்வு எழுத, hall ticket வழங்குவதும் முறையாகச் செயல்பட, அன்று தேர்வு இல்லாத மாணவர்கள் மட்டுமே கல்லூரியைக் காக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். அதோடு ஆசிரியர்களும் அவ்வப்போது தேர்வு உள்ள வகுப்பு மாணவர்களைத் தேர்வு எழுத அனுப்பிய வண்ணம் இருந்தனர். எனக்கே மிக்க ஆச்சரியமாக இருந்தது.

பரபரப்பான அந்த நாள் முழுவதும் இன்னும் முடிந்துவிடவில்லையே! பகல்நேரத்தில் இருந்த பரபரப்பின் முழு சாரமும் அந்த இரவின் நிகழ்வுகளில்தான் நடந்தேறின. வேதனையான, சோதனையான இரவு ….

No comments: